டோனிக்கு மாற்று விக்கெட் காப்பாளர் யாரும் இல்லை என்பதால் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடரில் அவர் விளையாடுவது உறுதி என தேர்வுகுழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.
டோனியின் உடற்தகுதி மற்றும் வயதை கருத்திற்கு கொண்டு அவரை புறந்தள்ளுவதற்கு பலர் முயற்சித்த போதும், வாழ்வா சாவா என்ற மனநிலையில் இருந்த டோனிக்கு இந்த கருத்து புத்துயீர் அளித்துள்ளது.
இந்நிலையில் டோனியின் எதிர்காலம் குறித்து எம்.எஸ்.கே.பிரசாத் கூறுகையில்,
டோனி தான் இப்போதும் உலகின் நம்பர் ஒன் விக்கெட் காப்பாளராக உள்ளார். இலங்கைக்கு எதிரான ரி-வென்ரி போட்டியில் அவரது ஸ்டம்பிங் மற்றும் பிடியெடுப்பு வியக்க வைக்கும் விதத்தில் இருந்தது.
அவருடன் ஒப்பீடும் அளவுக்கு எந்த விக்கெட் காப்பாளரையும் நான் பார்க்கவில்லை. இந்திய ‘ஏ’ அணி விளையாடிய தொடரின் போது இளம் விக்கெட் காப்பாளர்களை பயன்படுத்தி பார்த்தோம்.
நாங்கள் எதிர்பார்த்தப் படி இளம் விக்கெட் காப்பாளர்கள் செயல்படவில்லை. டோனிக்கு மாற்று விக்கெட் காப்பாளர் யாரும் இல்லை.
இதனால் 2019ஆம் உலகக்கிண்ண போட்டி வரை டோனியையே விக்கெட் காப்பாளராக தொடர செய்வது என்று முடிவு செய்து விட்டோம்.
இளம் விக்கெட் காப்பாளர்கள் ரிஷாப் பாண்ட், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு தொடர்ந்து இந்திய ‘ஏ’ அணியில் வாய்ப்பு அளிக்கப்படும்’ என கூறினார்.