சென்னை ராயப்பேட்டையில் அ.தி.மு.க.உயர்மட்டக் குழுக் கூட்டத்துக்குப் பின் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய முதலமைச்சர், மாயாஜாலம், தந்திரம் மூலம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றிருப்பதாகக் கூறினார்.
கடந்த பிப்ரவரி 16-ம் தேதி தாம் ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே ஆட்சி கலைந்துவிடும் என பலரும் விமர்சித்ததாகவும், தமது கண்காணிப்புக்கு வந்த அனைத்து கோப்புக்கும் தீர்வு கண்டு செயல்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
கட்சியில் துரோகம் செய்தவர்கள் மீதான நடவடிக்கை தீவிரமாகும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஒரு மாயமான் என்றும், மாயமானை நம்பி பின்னே சென்றவர்களுக்கு ராமாயணத்தில் ஏற்பட்ட நிலைதான் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
கட்சிக்கு துரோகம் செய்தவர்கள், விதிகளை மதிக்காதவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தில்லுமுல்லு செய்தே வெற்றி பெற்றிருப்பதாகவும், தாம் ஒரு 420 என தினகரனே தம்மிடம் கூறியுள்ளதாகவும் ஓபிஎஸ் தெரிவித்தார்.