அரசியலில் களமிறங்குவது தொடர்பான அறிவிப்பை எதிர்வரும் 31ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரசிகர்களுடனான இரண்டாம் கட்ட சந்திப்பு சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. இதன்போதே ரஜினிகாந்த் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
சந்திப்பின் ஆரம்பத்தில், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மௌன அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த், தனது இல்லத்திற்கு வருகை தந்து ஜெயலலிதா தன்னைச் சந்தித்ததை பணிவுடன் நினைவுகூர்ந்தார்.
மேலும், தான் அரசியலுக்கு வருவது பற்றி மக்களை விட ஊடகங்களே அதிக ஆர்வமாக உள்ளதென குறிப்பிட்ட ரஜினிகாந்த், அரசியல் தனக்கு புதிதல்லவென கூறினார்.
எனினும், அதன் கஷ்ட நஷ்டங்களை அறிந்துகொண்டதன் காரணமாகவே அரசியலுக்கு வர தயங்குவதாகவும் தெரிவித்தார். எவ்வாறாயினும், தனது நிலைப்பாட்டை ரசிகர்களுடனான சந்திப்பின் இறுதி நாளான எதிர்வரும் 31ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, நடிப்பில் தன்னை உயரத்திற்குக் கொண்டு சென்ற இயக்குநர் மகேந்திரனையும் நினைவுபடுத்தினார். குறிப்பாக ரஜினி ஸ்டைல் ஒன்றை அறிமுகப்படுத்தியதே மகேந்திரன்தான் எனவும் கூறியுள்ளார்.
ரசிகர்ளுடனான சந்திப்பு இடம்பெறும் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டப பகுதியில், பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.