இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான வவுனியா பேரூந்து நிலையத்தில் இருந்து வவுனியா தனியார் பஸ்கள் உள்ளுர் சேவைகளை இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கச் சென்ற போது, இ.போ.சபையினர் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன், அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தில் இருந்து அரச மற்றும் தனியார் பேரூந்து சேவைகள் நடைபெற வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனினால் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
எனினும் இதனை நடைமுறைப்படுத்துவதில் இ.போ.சபை தரப்பால் சில பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் நத்தார் மற்றும் பண்டிகைக்காலம் என்பதால் புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து முழுமையான சேவையை மேற்கொள்வதனை இரண்டு வாரங்களுக்கு பிற்போடுவது என தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் இடைப்பட்ட காலப்பகுதியில் தனியார் பஸ்ஸின் உள்ளுர் சேவைகள் மட்டும் பழைய பேரூந்து நிலையத்தில் இருந்தும், தூர இடங்களுக்கான சேவைகள் புதிய பேரூந்து நிலையத்தில் இருந்தும் செயற்படுத்துவதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சரின் சிரேஸ்ட செயலாளர் விஜயலட்சுமி கேதீஸ்வரன் நேற்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இன்று காலை வவுனியா இ.போ.ச பேரூந்து நிலையத்திற்கு தனியார் பஸ்கள் உள்ளூர் சேவைகளை முன்னெடுக்க சென்ற போது இ.போ.சபையினர் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.