கிறிஸ்ட்சேர்ச்சில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியுடனான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைப்படி 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.
இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3:0 என்ற ரீதியில் நியூஸிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற குறித்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
எனினும் போட்டியின் ஆரம்பத்திலேயே மழை குறுக்கிட்டதால்; போட்டி ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதுடன் குறித்த போட்டியானது 23 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 23 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 131 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
நியூஸிலாந்து அணியின் சார்பில் டெய்லர் 47 ஓட்டங்களையும் டொம் லாதம் 37 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் கொட்ரெல் 2 விக்கெட்களையும் ஹோல்டர் மற்றும் மில்லர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து 132 என்ற ஓட்ட இலக்கை நோக்கி துடுப்பாட்டத்தில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 23 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 99 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வெற்றிபெற்றது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஹோல்டர் 34 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
போட்டியின் ஆட்டநாயகனாக நியூஸிலாந்து வீரர் ரொஸ் டெய்லர் தெரிவு செய்யப்பட தொடரின் ஆட்டநாயகனாக டிரென்ட் போல்ட் தெரிவு செய்யப்பட்டார்.