ரஸ்யாவின் தேயிலை ஏற்றுமதி தடைக்கு அரசாங்கம் விரைந்து எடுத்த நடவடிக்கைக்கு எங்களுடைய பெருந்தோட்ட மக்கள் சார்பாக நன்றிகளை அரசாங்கத்திற்கு தெரிவிப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து ரஸ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையில் வண்டுகள் இருப்பதாக கூறி கடந்த வாரம் அதற்கு தடை விதித்தமை பெருந்தோட்ட துறையில் பல கேள்விகளை எழுப்பியது.
இது திட்டமிடப்பட்ட சதியா?அல்லது தவறுதலாக நடந்துள்ளதா?அல்லது ரஸ்யாவில் இருந்து தருவிக்கப்படுகின்ற எஸ்பெஸ்டஸ் கூரைத்தகடுகளுக்கு அரசாங்கம் ஜனவரி முதல் தடை விதித்ததன் காரணமாக இந்த தடைவிதிக்கப்பட்டதா போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்த தடை காரணமாக பெருந்தோட்டத்துறை பாதிப்படையக்கூடும் எனவும் பலரும் கருத்து தெரிவித்தனர்.
அது மட்டுமல்லாமல் எங்களுடைய பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரமும் வெகுவாக பாதிக்கப்படுகின்ற நிலைமை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ மற்றும் அமைச்சர் நவீன் திசாநாயக்க ஆகியோர் விரைந்து எடுத்த நடவடிக்கை காரணமாக தற்பொழுது தடையை நீக்கி கொள்வதாகவும் சில நிபந்தனைகளை விதித்திருப்பதாகவும் தெரியவருகின்றது.
இந்த தடை தொடர்ந்திருந்தால் ரஸ்யாவை பின்பற்றி இன்னும் சில நாடுகளும் எமது தேயிலைக்கான ஏற்றுமதி தடையை ஏற்படுத்தியிருக்கலாம்.
இது எமது பொருளாதாரத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்.
அது மட்டுமல்லாமல் அடுத்த வருடம் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.
குறித்த ஏற்றுமதி பொதிகளை யார் அனுப்பியது என்பதை உண்மையை கண்டறிந்து அவர்களுக்கு உரிய நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க வேண்டும்.
எனவே இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் உடனடியாக செயற்பட்டதன் காரணமாக இதற்கு விரைவாக தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டது.
இந்த பிரச்சினையின் போது இணைந்து செயற்பட்ட அமைச்சர் ரிசாட் பதூர்தீன் உட்பட்ட அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அரசாங்கத்திற்கும் பெருந்தோட்ட மக்களின் சார்பாக தனது நன்றிகளை தெரிவிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.