சுனாமிப் பேரலையினால் காவுகொள்ளப்பட்ட உறவுகளின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை மன்னாரில் நினைவு கூறப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட கலை இலக்கிய பண்பாட்டு கழகத்தின் இயக்குனர் மோகன் ராஜ் தலைமையில் மன்னார் பிரதான பாலத்தடி கடலேரி பகுதியில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த அஞ்சலி நிகழ்வில் தீபம் ஏற்றப்பட்டு மலர் தூவி உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன் போது அருட்தந்தை நேரு அடிகளார், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதேவேளை, தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு இன்று காலை மன்னார் சாந்திபுரம் சிறுவர் பூங்காவில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகு ஏற்பாடு செய்திருந்த குறித்த நிகழ்வில் சர்வ மதத்தலைவர்கள், மன்னார் பிரதேசச் செயலாளர் என்.பரமதாசன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர், மாவட்ட கடற்தொழில் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் உட்பட பொது மக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது சுனாமி அனர்த்தத்தில் உயிர் நீத்த மக்களின் 13 ஆம் ஆண்டு நினைவு கூறப்பட்டதோடு, அஞ்சலி உரைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.