ஒக்கி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்துள்ள மத்தியக் குழுவினருடன், மீனவ மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மத்திய உள்துறை இணை செயலாளர் சஞ்சீவ் குமார் ஜிந்தால் தலைமையில், 5 பேர் கொண்ட மத்தியக் குழுவினர் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்துள்ளனர்.
கொல்லங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளியில், ஒக்கி புயல் பாதிப்புகள் குறித்த புகைப்படங்களை பார்வையிட்ட அந்தக் குழுவினர், கன்னியாகுமரி ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவான் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
கொல்லங்கோட்டிலிருந்து தூத்தூர் சென்ற மத்தியக்குழுவினர், செயின்ட் ஜூடு கல்லூரியில், 8 மீனவ கிராமங்களின் பிரதிநிதிகளிடம் குறைகளைக் கேட்டனர்.
அப்போது, புயல் பாதித்த அனைத்து மீனவ கிராமங்களையும் நேரில் பார்வையிட வலியுறுத்தி, கிராமத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தூத்தூரைத் தொடர்ந்து, மத்தியக்குழுவினர் ஏற்கனவே முடிவு செய்தபடி வல்லவிளை, நீரோடி கிராமங்களுக்குச் சென்றனர்.
அங்கு அவர்களை பெண்கள் கண்ணீர் விட்டு அழுதவாறே குறைகளை கூறினர்.
ஜனவரி 1-ஆம் திகதிக்குப் பிறகும் திரும்பி வராத மீனவர்களை, மீனவ கிராம மரபுப்படி உயிரிழந்தவர்கள் என அரசே அறிவித்து,
நிவாரணத் தொகையும் வழங்க வேண்டுமென மீனவர் சங்கத்தினர் முறையிட்டனர்.
நீரோடிக்குப் பிறகு 3 குழுக்களாக பிரியும் மத்தியக் குழுவினர், இன்றும் நாளையும் ஒக்கி புயல் பாதித்த விவசாய, பழங்குடியின, மலையோர கிராமங்களில் ஆய்வு செய்தனர்.