பாகிஸ்தானில் குல்பூசன் ஜாதவின் குடும்ப பெண்கள் விதவைகளைப் போல் ஆக்கப்பட்டதாக மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் கடுமையாகத் தாக்கி பேசியுள்ளார்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு குல்பூசண் ஜாதவைச் சந்திக்க சென்ற அவரது தாயார் மற்றும் மனைவி ஆகிய இருவரின் பொட்டு, மாங்கல்யம், வளையல்கள் அகற்றப்பட்டு விதவைகளைப் போல் ஆக்கப்பட்டதால், ஜாதவ் தமது தாயாரை சந்தித்ததும் ‘அப்பாவுக்கு என்ன ஆனது?’ என்றே முதலில் கேட்டதாக சுஸ்மா சுட்டிக்காட்டியுள்ளார்.
பொட்டு, மாங்கல்யம் இல்லாத தாயைக் கண்டு, தாம் இல்லாத நேரத்தில் தந்தைக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டதோ என எண்ணி பயந்திருக்கக் கூடும் என்றும் அவரது தாய் வேதனை தெரிவித்ததாக சுஸ்மா குறிப்பிட்டார்.
இதேவேளை இது மதவேறுபாடின்றி இந்தியாவில் உள்ள அனைத்து தாய் மற்றும் சகோதரிகளையும் அவமதித்ததற்கு சமம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பாகிஸ்தானுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.