எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தல் பற்றி சிந்திக்கவில்லை என்றும் தமிழ் மக்கள் பேரவையின் கருத்துக்களை ஒத்த கருத்துக்களை உடையவர்களை மதிப்பதாகவும், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே க.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் வடக்கு கிழக்கில் தேர்தல் காலத்தில் என் பெயரை முன்வைத்து கட்சிகளின் சார்பிலும் தனிப்பட்ட வேட்பாளர்கள் சார்பிலும் நன்மைகளைப் பெற பலர் எத்தனிக்கின்றார்கள் என்று க.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தல் பற்றி தான் எந்தவிதமான முடிவும் எடுக்காமலேயே தன்னுடைய சின்னம் பற்றியெல்லாம் கருத்துக்கள் வெளிவந்துள்ளதாகவும் க.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஊழலற்ற, நேர்மையான, தகைமையுடைய, மக்களை நேசிக்கும் வேட்பாளர்களுக்கு உங்கள் வாக்குகளை அளியுங்கள் என்று கோரியுள்ளதாக தெரிவித்த க.வி.விக்னேஸ்வரன்
உள்ளுராட்சியில் கட்சிகள் புகுந்ததால் இதுவரையும் எமது உள்ளுராட்சி மன்றங்கள் பலவிதமான சிக்கல்களை எதிர்நோக்கி வந்துள்ளன.
இதே போன்றுதான் முன்னர் அரசியல்வாதிகளும் அரசியலும் புகுந்து எமது கூட்டுறவு சங்கங்களை சீர்குழைத்துள்ளன.
தான் இதுவரையில், எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தல் பற்றியோ கட்சி சின்னம் பற்றியோ சிந்திக்கவில்லை.
தனது அரசியல் கொள்கைகள் கிட்டத்தட்ட தமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை ஒத்தது என்று ஏற்கனவே கூறியுள்ளதாகவும் க.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.