சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை 40 ஆயிரத்து 707 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் இன்று சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்குக் கடந்த 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியான அதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுக வேட்பாளர்கள் என 57 பேர் போட்டியிட்டனர். கடந்த 24-ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
அதில், சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் 40 ஆயிரத்து 707 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் கட்சி வேட்பாளர் மதுசூதனனை 40 ஆயிரத்து 707 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அமோக வெற்றி பெற்றார்.
திமுக வேட்பாளர் மருதுகணேஷ் உட்பட 57 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் இன்று மதியம் சுமார் 1.45 மணியளவில் எம்.எல்.ஏவாக தினகரன் பொறுப்பேற்றார்.
அப்போது தினகரன் உறுதிமொழியை வாசித்தார். அவருக்கு சபாநாயகர் தனபால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்றதற்கான பதிவேட்டில் தினகரன் கையெழுத்திட்டபோது அவரது ஆதரவாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
எம்.எல்.ஏவாக பதிவியேற்றுக்கொண்ட தினகரனுக்கு சபாநாயகர் தனபால் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
தினகரன் பதவியேற்பையொட்டி தலைமைச் செயலகத்தைச் சுற்றி கூடுதலாக 500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், தினகரனுக்கு ஆதரவாகத் தலைமைச் செயலகம் செல்லும் வழியில் ஆங்காங்கே சில பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
அவைகள் பின்னர் அகற்றப்பட்டன. பேனர்கள் அகற்றப்பட்டது குறித்து போலீஸாருடன் தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வரும் ஜனவரி 8-ஆம் தேதி தமிழக சட்டபேரவை கூடும் போது தினகரனும் கலந்து கொள்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.