உலக ரேபிட் செஸ் போட்டியில் மீண்டும் உலக சாம்பியன் ஆன விஸ்வநாதன் ஆனந்த், தன் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவில் நடைபெற்ற உலக ரேபிட் செஸ் போட்டியில் இந்தியாவின் தமிழ்நாட்டை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
ரியாத் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் நடப்பு சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை 9-வது சுற்றில் ஆனந்த் வென்று ஆச்சர்யப்படுத்தினார்.
15 சுற்றுகளின் முடிவில் ஆனந்த் உள்ளிட்ட மூவர் 10.5 புள்ளிகள் பெற்று முதலிடம் வகித்தார்கள்.
ஒரு தோல்வியும் அடையாமல் ஆறு வெற்றிகள், 9 டிராக்கள் மூலம் முதல் இடத்தைப் பிடித்தார் ஆனந்த்.
பிறகு டை பிரேக் முறையில் உலக ரேபிட் செஸ் சாம்பியன் ஆனார் ஆனந்த்.
டை பிரேக் போட்டியில் ரஷ்யாவின் ஃபெடோசீவை 1.5-0.5 என்கிற கணக்கில் தோற்கடித்ததால் சாம்பியன் பட்டம் ஆனந்துக்கு வழங்கப்பட்டது.
48 வயதில் மீண்டும் உலக சாம்பியன் ஆகியிருக்கும் ஆனந்த் இந்த வெற்றி குறித்துக் கூறியதாவது:
அனைவருக்கும் நன்றி. மிதப்பது போல உணர்கிறேன்.
வீ ஆர் தி சாம்பியன்ஸ் என்கிற பாடல் என் தலையில் ஓடிக்கொண்டிருக்கிறது. வரிகள் அவ்வளவு உண்மையாக உள்ளன.
இத்தருணத்தைப் பற்றி பிளிட்ஸ் போட்டிக்குப் பிறகு சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.
2003-ல் ரேபிட் செஸ் உலக சாம்பியன் ஆன ஆனந்த் தற்போது மீண்டும் உலக சாம்பியனாகியுள்ளார்.
பிடிஐக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தப் போட்டியில் நான் கலந்துகொள்வதாகவே இல்லை.
ஏனெனில் மிகவும் தாமதமாக அறிவிக்கப்பட்டதால் அப்படியொரு நிலை உண்டானது.
மீண்டும் உலக சாம்பியன் ஆனதில் நல்ல உணர்வைத் தருகிறது. வார்த்தைகளால் விவரிக்கமுடியாத மகிழ்ச்சி. இது மிகவும் ஆச்சர்யமான முடிவு.
லண்டனில் போட்டியை நான் வெல்ல ஆசைப்படாவிட்டாலும் மிக மோசமாக விளையாடி கடைசி இடம் பிடித்தேன்.
இந்தப் போட்டியில் முதல் நாளன்று நான் மிகச் சிறப்பாக விளையாடினேன். ரேபிட் செஸ் போட்டிகளில் நான் ஆதிக்கம் செலுத்திய காலத்தை நினைவூட்டியது.
அது எனக்கு மிகவும் நம்பிக்கையளித்தது. இப்போட்டியில் கார்ல்சனை வென்றதும் மிக முக்கியமானது.
ரேபிட் மற்றும் பிளிட்ஸில் மிகவும் வலுவாக உள்ள வீரரை வென்றதில் மகிழ்ச்சியாக இருந்தது.
கடைசிக் கட்டத்தில் எனக்குப் பதக்கம் கிடைக்குமா என்றுகூட சந்தேகப்பட்டேன். ஆனால் பல எதிர்பாராத முடிவுகள் எனக்குச் சாதகமாக அமைந்தன.
டை பிரேக் ஆரம்பமான பிறகு எனக்குச் சாதகமான சூழல்கள் ஏற்பட்டன. அப்போது அதிரஸ்;டக் காற்று என் பக்கம் வீசியதாக உணர்ந்தேன் என்று கூறியுள்ளார்.