வாடகையை உயர்த்தி சென்னை மாநகராட்சி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி லதா ரஜினிகாந்த் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் சார்பில் மோகன் மேனன் தாக்கல் செய்த மனுவில், ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி சாலையில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான கடையை வாடகைக்கு எடுத்து டிராவல் எக்சேஞ் இந்தியா என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறேன்.
பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட நடவடிக்கைகளால் தொழில் பெரிதும் நசிவடைந்துள்ளது.
இந்தக் கட்டடத்தை மாநகராட்சி நிர்வாகம் முறையாகப் பராமரிப்பது இல்லை. மாதந்தோறும் மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய ரூ.3,702 வாடகையை நிலுவையின்றி செலுத்தி வருகிறோம்.
ஆனால் வாடகையை மாநகராட்சி நிர்வாகம் ரூ.21,160-ஆக திடீரென உயர்த்திவிட்டது.
எனவே, வாடகையை உயர்த்தி மாநகராட்சி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார்.
மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்குரைஞர், மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகளுக்கு அரசு உத்தரவுப்படி 9 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாடகை உயர்த்தப்படுகிறது.
அதன் அடிப்படையில்தான் மனுதாரரின் கடைக்கு வாடகை உயர்த்தப்பட்டுள்ளது.
உயர்த்தபட்ட வாடகையைச் செலுத்த விருப்பமில்லாவிட்டால் கடையைக் காலி செய்துவிட்டு பொது ஏலத்தில் பங்கேற்று கடையை பெறும் முயற்சியில் லதா ரஜினிகாந்த் ஈடுபடலாம் என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி எஸ். வைத்தியநாதன், வாடகையை உயர்த்தி சென்னை மாநகராட்சி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி லதா ரஜினிகாந்த் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
லதா ரஜினிகாந்துக்குக் கடை தேவைப்படும்பட்சத்தில் ஒரு மாதத்தில் மாநகராட்சி வாடகையைச் செலுத்தவேண்டும்.
இல்லாவிட்டால் அந்தக் கடையை மாநகராட்சி ஏலத்தில் விடலாம். ஏலம் அறிவிக்கப்பட்ட பிறகும் கடையைக் காலி செய்யாவிட்டால், காவல்துறை உதவியுடன் கடைக்குள் சென்று சென்னை மாநகராட்சி காலி செய்யலாம் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.