எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்காக தேர்தல் தொகுதிகளை பிரிப்பதற்கான எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கையை தயாரிக்கும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிவித்துள்ளது.
குறித்த அறிக்கை அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் வாரமளவில் வழங்கப்படும் என எல்லை நிர்ணய குழுவின் செயலாளர் சமன் ஸ்ரீரத்நாயக்க தெரிவித்தார்.
இதேவேளை எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாக அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து கருத்துக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர் தயாரிக்கப்பட்ட அறிக்கை அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபை அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தேர்தல் தொகுதிகளை பிரித்து எல்லைகளை நிர்ணயிப்பதற்காக ஜனாதிபதியினால் அண்மையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
அதன்படி அந்த குழுவின் பணிகள் கடந்த ஒக்டோபர் மாதம் 13ம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன் பொது மக்கள் கருத்துக்களை வழங்குவதற்காக கடந்த 02ம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.