கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகல்லாகமவின் பாரியார் தீப்தி போகல்லாகம காலனித்துவ கால ஆளுநர் போன்று செயற்படுவதாக அமைச்சர் மனோ கணேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த வாரம் திருகோணமலையிலுள்ள இந்து ஆலயம் ஒன்றிற்கு விஜயம் செய்த அவர், ஆலயத்திற்குள் பாதணியுடன் செல்ல முற்பட்ட போது, அங்கிருந்த தமிழ் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து தீப்தி போகல்லாகம தமிழ் பக்தர்களை கடுமையாக திட்டித் தீர்த்துள்ளமை தொடர்பிலேயே தேசிய கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தீப்தி போகல்லாகமயின் செயற்பாடு நாட்டின் சகவாழ்விற்கு குந்தகம் ஏற்படும் வகையில் அமைந்துள்ளதாகவும் மனோகணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் கூட பாதணிகளை கழற்றிவிட்டு கோயிலுக்கு பிரவேசித்துள்ளதாகவும் தீப்தி இந்து மதத்தை அவமரியாதை செய்யும் வகையில் நடந்து கொண்டதாகவும் மனோகணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.