பொரளை மலர்ச்சாலையில் வைக்கப்பட்டிருந்த மறைந்த சிரேஸ்ட ஊடகவியலாளரான பன்னீர்செல்வத்தின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (சனிக்கிழமை) நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
52 வயதான அவர் அண்மைக்காலமாக கடுமையான சுகவீனமுற்று தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று காலை வேளையில் காலமானார்.
கடந்த 1988 ஆம் ஆண்டு ஊடகப் பரப்புக்குள் சாதாரண இலிகிதராக பிரவேசித்த பன்னீர்செல்வம், பின்னர் மொழி பெயர்ப்பாளராகவும், கட்டுரையாசிரியராகவும் பரிணமித்து முழு நேர ஊடகவியலாளர் ஆனார்.
இலங்கையின் வீரகேசரி மற்றும் தினக்குரல் பத்திரிகைகளில் பணிபுரிந்த அவர், இறுதியாக பாராளுமன்ற செய்தியாளராகவும் கடமையாற்றினார்.
இதேவேளை, இலங்கை பத்திரிகை பேரவை மற்றும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம் ஆகியன இணைந்து வருடந்தோறும் மேற்கொண்டுவரும் சிறந்த ஊடகவியலாளருக்கான விருது விழாவில் இம்முறை வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியும் அவர் கௌரவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.