யாழ்ப்பாணம் கைதடி நாவற்குழி தெற்கு பகுதியான கோவிலாக்கண்டிப்பகுதியில் ஏழு பவுண் தாலிக்கொடி அறுக்கப்பட்ட சம்பவம் ஒன்று, இன்று (30) காலை இடம்பெற்றுள்ளது.
சுகாதார உத்தியோகஸ்தர்கள் என தெரிவித்து கழுத்துப்பட்டி, சப்பாத்து அணிந்து, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீட்டுக்குள் நுழைந்து ஏழு பவுண் தாலிக்கொடியை அறுத்துச்சென்றுள்ளனர்.
இன்று காலை 9.20 மணிக்கு நாவற்குழி தெற்கு கோவிலாக்கண்டிப்பகுதியில் இராமையாபிள்ளை பிள்ளையம்மா என்ற 58 வயதுடைய குடும்பப் பெண்ணின் தாலியையே இவ்வாறு அறுத்துச்சென்றுள்ளனர்.
குறித்த வீட்டுக்குச்சென்றவர்கள் சுற்றாடலில் நுளம்புப் பெருக்கம் காணப்படுகின்ற காரணத்தினால் நுளம்பு புகையடிப்பதற்கு கையொப்பமிடுமாறு கோரி அந்த பெண்மணிக்கு அருகே சென்றுள்ளனர்
அந்த பெண்ணின் தாலிக்கொடியை அறுத்துக்கொண்டு வெளியில் தயார் நிலையில் இருந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுள்ளனர்.
இதற்கு முன்பதாக அயல் வீட்டுக்குச்சென்று நவீல்ட் பாடசாலைக்கு பணம் சேர்ப்பதாக கூறி பணம் பெற்றுள்ளதாவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் யாழ்.குடாநாட்டில் அரச உத்தியோஸ்தர்கள், சுகார உத்தியோகஸ்தர்கள் போன்று பாசாங்கு செய்து களவு நடவடிக்கையில் ஈடுபடுகின்றமை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.