இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக முச்சக்கரவண்டி சேவையை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்கும் சிறந்த சேவையாக, இலங்கை முச்சக்கரவண்டிய சேவையை பெயரிடும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்ப்பட்டுள்ளது.
அதற்கமைய வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சேவை வழங்கும் முச்சக்கர வண்டி மற்றும் அதன் சாரதிகள் இலங்கை சுற்றுலா சபையில் பதிவு செய்யப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முச்சக்கர வண்டி சாரதிகள் விசேட பயிற்சி ஒன்றில் கலந்து கொள்ள வேண்டும் என்பதோடு, அங்கு மொழி பயிற்சி, நாகரிகம், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு ஆகிய துறைகளின் கீழ் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் மீற்றர் பொருத்த வேண்டும். சாரதிகளின் பெயர், விலாசம் மற்றும் அவர்களின் தொலைபேசி இலக்கங்களை காட்சிப்படுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகரில் பத்தாயிரத்திற்கும் அதிகமான முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபடுகின்றன. இந்நிலையில் இந்த வேலைத்திட்டம் முதல்முதலாக கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அடுத்து வரும் காலங்களில் இலங்கையின் ஏனைய நகரங்களுக்கும் இந்த வேலைத்திட்டம் விஸ்தரிக்கப்படவுள்ளது.
இவ்வாறு பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் முச்சக்கர வண்டியில் ஏறும் வெளிநாட்டு சுற்றுலா பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு முகங்கொடுப்பதுடன், கொள்ளைச் சம்பவங்களும் இடம்பெறுவதாக அமெரிக்கா எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.