உள்ளூராட்சி தேர்தலில் போதைப்பொருளுக்கு அடிமையான எந்தவொரு வேட்பாளர்களுக்கும் எந்த கட்சியிலும் வாக்குகளை வழங்க வேண்டாம் என ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டுக்கும் எதிர்கால தலைமுறைக்கும் முன்மாதிரியை வழங்கக்கூடிய மக்கள் பிரதிநிதிகளை நாட்டுக்கும் கிராமத்திற்கும் தெரிவு செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுவரை காலமும் உள்ளூராட்சி நிறுவனங்கள் பௌதீகவள அபிவிருத்திக்காக மட்டுமே செயற்பட்டு வந்தன என்றபோதும் இம்முறை உள்ளூராட்சி தேர்தலுடன் மக்களின் பண்புகள் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தி சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்பும் விரிவானதொரு நிகழ்ச்சித்திட்டம் அதனூடாக நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிதாக தெரிவாகும் நகர சபை மற்றும் உள்ளூராட்சி சபை பிரதிநிதிகளை ஒன்று சேர்த்து இதற்கு முன்பு எந்தவொரு அரசாங்கமும் முன்னெடுக்காத நிகழ்ச்சித்திட்டமொன்றை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் எதிர்காலத்திற்காக செயலணிகளை அமைப்பதாகவும் தெரிவித்தார்.
இன்று நாடு எதிர்நோக்கியுள்ள போதைப்பொருள் பிரச்சினையில் இருந்து சமூகத்தை விடுவிப்பதற்கு இம்முறை தேர்தலில் போட்டியிடும் பெண் பிரதிநிதிகளை ஒன்று திரட்டி போதைப்பொருள் ஒழிப்பு செயலணி ஒன்றை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நாட்டின் நல்ல பெயருக்கு பெரும் களங்கமாக உள்ள தற்கொலையை தவிர்ப்பதற்கு இளம் பிரதிநிதிகளை ஒன்று திரட்டி நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.