ரசிகர்களையும், அரசியல் மாற்றத்தை விரும்பும் மக்களையும் ஒருங்கிணைக்க இணைய தளம் தொடங்கியிருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள அவர், தனது அரசியல் பிரவேசத்தை வரவேற்ற அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத ரஜினி ரசிகர் மன்ற உறுப்பினர்களையும் தமிழ்நாட்டில் நல்ல அரசியல் மாற்றத்தை கொண்டு வர விரும்பும் மக்களையும் ஒருங்கிணைத்து ஒரு குடைக்கு கீழ் கொண்டுவரவேண்டும் என்று தெரிவித்துள்ள அவர்,
இதற்காக ரஜினி மன்றம் டாட் ஓ.ஆர்.ஜி. என்ற இணையதளப் பக்கத்தை உருவாக்கியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதில் இணைய விரும்புபவர்கள் தங்கள் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவற்றை பதிவு செய்து உறுப்பினர் ஆகலாம் என்று ரஜினி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்றும் அவர் வீடியோவில் கூறியுள்ளார்.
அவர் பேசுவதன் பின்னணியில் பாபா முத்திரை இடம்பெற்றுள்ளது.
ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் என்ற பெயரில் ரஜினிகாந்த்தின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ரஜினி மன்றம் ((RAJINI MANDRAM)) என்ற ஆண்ட்ராய்டு செயலியும் www.rajinimandram.org என்ற வலைதளப் பக்கமும் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் ரசிகர் மன்ற உறுப்பினர்கள் தங்கள் மன்றத்தின் விபரங்களை தெரிவிக்குமாறு கூறப்பட்டுள்ளது.