இந்தியாவில் கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 2ஆவது வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள ராச்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 16 பேருக்கான தண்டனை விவரங்களை ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஒன்றுபட்ட பிகார் மாநில முதல்வராக லாலு பதவி வகித்தபோது கடந்த 1996-ஆம் ஆண்டில், கால்நடைத் தீவனத் திட்டத்தில் சுமார் 950 கோடி ரூபா ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக 6 வழக்குகள் தொடுக்கப்பட்டன.
அவற்றில், சைபாஸா கருவூலத்தில் போலி கையெழுத்திட்டு ரூ.37.7 கோடியை முறைகேடு செய்தது தொடர்பான வழக்கில் கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அதில் லாலு பிரசாத், முன்னாள் முதலமைச்சர் ஜெகந்நாத் மிஸ்ரா உள்ளிட்டோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
லாலு பிரசாதுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் எம்.பி. பதவியை லாலு பிரசாத் இழந்ததுடன், தேர்தலில் போட்டியிடும் தகுதியையும் இழந்தார். எனினும், உச்ச நீதிமன்றம் அவரை பிணையில் விடுவித்தது.
இதையடுத்து, தேவ்கர் கருவூலத்தில் இருந்து ரூ.89.27 லட்சம் முறைகேடு செய்தது தொடர்பான 2-ஆவது வழக்கு மீதான விசாரணை முடிவடைந்ததையடுத்து,
ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவ்பால் சிங் கடந்த டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி லாலு பிரசாத், ஜெகதீஸ் சர்மா (ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்) உள்ளிட்ட 16 பேரை குற்றவாளிகளாக அறிவித்து தீர்ப்பளித்தார்.
இதைத் தொடர்ந்து, லாலு பிரசாத் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெகந்நாத் மிஸ்ரா, பொதுக் கணக்குக் குழுவின் முன்னாள் தலைவர் துருவ் பகத் உள்ளிட்ட 6 பேரை நீதிபதி விடுவித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், இவ்வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருக்கும் 16 பேருக்கான தண்டனை விவரங்களை, நீதிபதி சிவ்பால் சிங் இன்று சனிக்கிழமை (டிச.6) அறிவித்தார்.
முக்கிய குற்றவாளியான பிகார் முன்னாள் முதலமைச்சரும் ராஸ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சந்த், மகேஸ் பிரசாத், பேக் ஜூலியல், சுனில் குமார், சுசில் குமார், சுதிர் குமார் மற்றும் ராஜாராம் உள்ளிட்டோருக்கும் மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.