இலங்கை அரசாங்கம் தனக்கு உல்லாச பங்களா வழங்கியதாக சுரேஸ் பிறேமச்சந்திரன் அப்பட்டமான பொய்யை சொல்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகபேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு அண்மையில் நடைபெற்றது.
இதன்போது பேசிய சுரேஸ் பிறேமச்சந்திரன், அரசாங்கத்துடன் இணங்கி செயற்பட்டமைக்காக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களே நன்மைகளைப் பெற்றிருப்பதாக கருத்து தெரிவித்திருந்தார்.
எனினும் தமிழர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு கொழும்பு 7ல் உல்லாச பங்களா வழங்கப்பட்டுள்ளதாகவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.
குறித்த கருத்துக்கு இன்று பருத்துறையில் நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சுமந்திரன் மறுத்து பேசியுள்ளார்.
கொழும்பில் ஒரு விலாசத்தை சொல்லி அந்த விலாசத்தில் தனக்கு ஒரு பங்களா வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு 135 ரூபாய் வாடகை எனவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் கூறியுள்ளத அப்பட்டமான பொய் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சுரேஸ் பிறேமச்சந்திரன், கூறியிருக்கும் குறித்த விலாசத்தில் பங்களாவே இல்லை என தெரிவித்துள்ள சுமந்திரன் அவ்வாறு பொய்யான ஒரு கருத்தை ஊடகங்கள் முன்னுரிமை கொடுத்து முதல் பக்கத்தில் செய்தியாக பிரசுரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறே தமக்கு எதிரான பொய்கள் தொடர்ச்சியாக பரப்பப்பட்டு வருவதாகவும் சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.