நாட்டில் எதிர்வரும் மூன்று மாத காலங்களுக்கு நாடளாவிய ரீதியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும்படி பொலிஸ்மா அதிபர் பணிப்புரை வழங்கியுள்ளார்.
எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தல்களை முன்னிட்டே இந்த விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ராஜகரியவில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது பொலிஸ் ஊடக பேச்சாளரான ருவன் குணசேகர தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியாக சட்டவிரோத ஆயுதங்களை தேடுவதற்கும் விசேட காவல்துறை குழுவினர் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தவிர வீதித் தடைகளை ஏற்படுத்தி சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி பொலிஸ்மா அதிபர், சகல காவல்துறை நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
குறித்த காலப்பகுதியினுள் குற்றவாளிகளை இனம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்தும் காவல்துறை அதிகாரிகளுக்கு, காவல்துறை நலன்புரி நிதியில் இருந்து விசேட கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனவும் ருவன் குணசேகர மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, தேர்தல் சட்டங்களை மீறிய 54 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் அச்சுறுத்தல் குறித்தே பெரும்பாலான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்த ருவன் குணசேகர
கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களில் 8 வேட்பாளர்களும் உள்ளடங்குவதாக காவல்துறையின் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.