யாழ்ப்பாண நகரத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பது தொடர்பிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் தயாரிக்கப்பட்டுள்ள ´யாழ் 2020 – நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தேசம் எனும் செயற்றிட்டம் தொடர்பான வரைபடம் நேற்று (06.01.2018) சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
யாழ் நகரில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் குறித்த ´யாழ் 2020´ செயற்திட்டத்தின் வரைபடத்தை தமிழ் தேசிய பேரவையின் யாழ். மாநகர சபையின் முதல்வர் வேட்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன், வெளியிட்டுள்ளார்.
அத்துடன் சில திட்டமிடல் நிபுணர்களுடன் இணைந்து குறித்த செயற்றிட்டத்தினை உருவாக்கியுள்ளதாகவும், தமது கட்சி யாழ் மாநகர சபையினைக் கைப்பற்றினால் 2020ம் ஆண்டுக்குள் யாழ் நகரைத் நேர்த்தியாக வடிவமைக்க முடியும் எனவும் வி.மணிவண்ணன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
யாழ். நகரத்தில் எவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்துவது என்பது தொடர்பில் நிபுணர்களுடன் ஆராய்ந்து திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளதாக தெரிவித்த வி.மணிவண்ணன், தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் அதனை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இரண்டு நவீன சந்தைகளின் கட்டட தொகுதிகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் வி.மணிவண்ணன், தெரிவித்தார்.
மேலும் பிரதானமாக மீள் சுழற்சியை அடிப்படையாக கொண்டு சூழலுக்கு தீங்கில்லாத வகையில் திண்ம கழிவகற்றல் முகாமைத்துவம் நடைமுறைக்கு கொண்டு வருதல், இதன் மூலம் கல்லுண்டையில் கொட்டப்படும் கழிவுகளுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை எட்ட முடியும் எனவும் வி.மணிவண்ணன், மேலும் தெரிவித்தள்ளார்.
இது தவிர யாழ். நகரில் உள்ள வீதிகள் அனைத்துமே நடைபாதைக்கு என இடம் ஒதுக்கப்படாமல் தான் காணப்படுகின்றன.
இதனால் மக்கள் வீதிகளினாலேயே நடந்து செல்லும் நிலை காணப்படுகின்றது. நோயாளர்களும் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
ஆகவே தமது திட்டத்தில் நகரத்தில் காணப்படுகின்ற அனைத்து வீதிகளுக்கும் நடைபாதைகள் அமைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் வி.மணிவண்ணன், குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நகரில் வாகன தரிப்பிடம் ஒன்று நவீனமயப்படுத்தப்பட்ட முறையில் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் இந்த வாகன தரிப்பிடம் அமைக்கப்படுமாக இருந்தால் வீதிகளின் நடுவே வாகனங்களை நிறுத்த வேண்டிய தேவை ஏற்படாது எனவும் குறிப்பாக யாழ். மாநகரத்துக்குள் காணப்படும் வாய்க்கல்கள் அனைத்துமே மாசடைந்த நிலையில் தான் காணப்படுகின்றன.
எனவே சிறந்த ஒரு வடிகாலமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவித்த வி.மணிவண்ணன்,
குறிப்பாக நகர அபிவிருத்தியில் ஏற்படுகின்ற சட்ட சிக்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு சட்டத்தரணிகள் கொண்ட குழுவும், நகர திட்டமிடல் தொடர்பில் ஆராய்வதற்கு பேராசிரியர்கள், துறைசார் நிபுணர்கள், பொருளியல் நிபுணர்கள் என்போரை உள்ளடக்கிய குழு ஒன்றும் உருவாக்கப்படவுள்ளது.
மேலும் எம்மால் கைப்பற்றப்படும் உள்ளூராட்சி சபைகளையும் ஒவ்வொரு நாடுகளை சேர்ந்த புலம்பெயர்ந்த உறவுகள் பொறுப்பெடுத்து அந்த சபைகளின் கிராம, நகர அபிவிருத்திக்கு நிதி, துறை சார் வளங்கள், பயிற்சிகள், அபிவிருத்திகளை வழங்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.