சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அலஸ்டைர் குக் 12 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டி சாதனைப் படைத்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் அலஸ்டைர் குக் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் டெஸ்ட் போட்டியில்; பல்வேறு சாதனைகள் படைத்து வருகிறார்.
ஆசஸ் தொடரில் மெல்போர்னில் நடைபெற்ற 4-வது டெஸ்டில் அலஸ்டைர் குக் 244 ஓட்டங்கள் குவித்தார்.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 11956 ஓட்டங்களை குவித்தார்.
அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் பட்டியலில் பிரையன் லாரா, மற்றும் சந்தர்பால் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி முன்றேறியுள்ளார்.
44 ஓட்டங்கள் எடுத்தால் 12 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டும் நிலையில், சிட்னி டெஸ்டில் களமிறங்கினார்.
முதல் இன்னிங்சில் 39 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் ஐந்து ஓட்டங்களால் 12 ஆயிரம் ஓட்டங்கள் என்ற வாய்ப்பை இழந்தார்.
இந்நிலையில் இங்கிலாந்து இன்று 2-வது இன்னிங்சை தொடங்கியது.
இதில் 10 ஓட்டங்கள் எடுத்த நிலையில் நாதன் லயன் பந்தில் நேரடி இலக்கின் மூலம் அட்டமிழந்தார்.
எனினும் 5 ஓட்டங்கள் எடுத்தபோது 12 ஆயிரம் ஓட்டங்கள் எடுத்து சாதனைப் படைத்தார்.
மேலும், 12 ஆயிரம் ஓட்டங்களை தொட்ட 6-வது சர்வதேச வீரர் என்ற பெருமையையும், முதலாவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இதேவேளை இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் 15921 ஓட்டங்களுடன் முதலாவது இடத்திலும்,
ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 13378 ஓட்டங்களுடன் 2-வது இடத்திலும்,
தென்ஆப்பிரிக்காவின் கல்லிஸ் 13289 ஓட்டங்களுடன் 3-வது இடத்திலும்,
இந்தியாவின் ராகுல் டிராவிட் 13288 ஓட்டங்களுடன் 4-வது இடத்திலும், இலங்கையின் குமார்
சங்ககரா 12400 ஓட்டங்களுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.
இவர்களை தொடர்ந்து தற்போது அலஸ்டைர் குக் 12005 ஓட்டங்களுடன் 6-வது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.