2017ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டு கடந்த மூன்று மாதங்கள் பயிற்சி வழங்கி, மத்திய கல்வி அமைச்சால் வடக்கு மாகாணத்துக்கு விடுவிக்கப்பட்ட, இலங்கை கல்வி நிர்வாக சேவை மட்டுப்படுத்தப்பட்ட அலுவலகர்களுக்கான நிலையங்களை வழங்குவதில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறித்த விடையம் தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து வடக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளரிடம் முதலமைச்சர் விளக்கம் கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் நாடாளாவிய ரீதியில் போட்டிப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்ட அலுவலகர்களுக்கு நியமனங்கள் மற்றும் சேவை நிலையங்கள் வழங்கும் போது பரீட்சையில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையிலேயே தெரிவுகள் வழங்கப்படல் வேண்டும் என நடைமுறை விதி கோவையில் கூறப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எனினும் குறித்த நடைமுறையை மீறி வடக்கு மாகாண கல்வி அமைச்சர், செயலாளர் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோர் முறையற்ற வகையில் தமக்கு சார்பானவர்களுக்கு நியமனங்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான மேலதிகாரிகளது தான்தோன்றித்தனமான மற்றும் முறைகேடான நடவடிக்கைகளே வடக்கு மாகாண கல்வி நிலை வீழ்ச்சி அடைந்தமைக்கான காரணம் என கல்விச் சமூகத்தினர் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பாதிக்கப்பட்டவர்கள் மேன்முறையீடு செய்த போதும் தேர்தலின் பின்னரே மேன்முறையீட்டு சபை கூடும் என, செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிடுகின்றனர்.
குறிப்பாக நியமனம் வழங்கியவர்களே மேன்முறையீட்டு சபையில் இருப்பின் அவர்களால் முன்னைய தவறை ஏற்று நியாயம் வழங்க முடியாது என பாதிக்கப்பட்டோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியான விசாரணை குழுவை நியமித்து நியாயத்தை பெற்றுக்கொடுப்பதன் மூலம் வடக்கு மாகாண கல்வி வளர்ச்சியை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.