தமது கோரிக்கையை தமிழக அரசு ஏற்கும் வரை போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தொடரும் என தொழிற்சங்கங்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளன.
தமிழ்நாட்டில் ஊதிய உயர்வு, பணிக்கொடை, ஓய்வூதியப் பலன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி 4ம் திகதி தொடக்கம்; போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் தமிழகம் முழுவதும் பேருந்து சேவை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் நான்காவது நாளாக இன்றும் (07.01.2018) தொடர்கிறது.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிடில் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்து இருந்தார்.
இந்நிலையில், தொழிற்சங்க நிர்வாகிகள் இன்று மாலை ஆலோசனை நடத்தினர்.
பின்னர், சிஐடியூ தொழிற்சங்க நிர்வாகி சவுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்
”போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினையில் முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்
குறித்த கோரிக்கையை ஏற்று தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதுவரை தங்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்த தொழிற்சங்க நிர்வாகி சவுந்தர்ராஜன் தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் பேருந்துகளை இயக்குவதால் விபத்துகள் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் ஓடாத பேருந்துகளை ஓடியதாக காட்டி முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாகவும் பொதுமக்களின் நலன் கருதி பொறுமையுடன் உள்ளதாகவும் தொழிற்சங்க நிர்வாகி சவுந்தர்ராஜன் மேலும் தெரிவித்தள்ளார்.
போக்குவரத்துக் கழகங்களின் நட்டத்திற்கு தொழிலாளர்கள் காரணமல்ல என தெரிவித்துள்ள தொழிற்சங்க நிர்வாகி சவுந்தர்ராஜன் தங்கள் தரப்பு நியாயங்களை உயர் நீதிமன்றத்தில் நாளை முன் வைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.