ஏமனில் அரசுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர். தலைநகர் சனா உள்ளிட்ட முக்கிய பகுதிகளை கைப்பற்றி தம் வசம் வைத்துள்ளனர்.
இதற்கிடையே சவுதி அரேபிய அரசாங்கம் ஏமனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்களை அடக்க ஏமனில் அந்நாட்டு படைகள் முகாமிட்டுள்ளன.
இந்த நிலையில் சதா மாகாணத்தில் முகாமிட்டிருந்த சவுதி அரேபிய போர் விமானம் ஒன்று நேற்று மாலை விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் குறித்த போர் விமானம் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இத்தகவலை ஹவுதி கிளர்ச்சியாளர்களின் அதிகாரப்பூர்வ ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது..
இதனால் மத்திய பகுதியில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. ஆனால் இத்தகவலை சவுதிஅரேபியா மறுத்துள்ளது.
போர் விமானம் விபத்துக்குள்ளானதற்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் என தெரிவித்துள்ளது.
மேலும் விபத்தில் சிக்கிய விமானத்தின் விமானிகளை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. அதில் இருந்த 2 விமானிகளும் உயிர் தப்பியுள்ளனர் என்றும் சவுதிஅரேபியா கூறுகிறது.
சமீப காலமாக ஏமன் எல்லையில் இருந்து சவுதிஅரேபியாவின் முக்கிய தளங்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் போர் விமானம் சுட்டு வீழத்தப்பட்டிருந்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.