ரஜினிகாந்த் அரசியல் பயணத்தின் முதல் அடியாக மதுரையில் முதலாவது மாநாடு நடத்தப்படுவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த மாநாட்டில் கட்சியின் பெயர், கொடி குறித்த அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் ராகவா லாரன்ஸ் தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்ததை தொடர்ந்து மன்ற நிர்வாகிகள் ரசிகர்களை ஒருங்கிணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
மதுரையில் தலைமை நற்பணி மன்றம் சார்பில் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு பாராட்டு விழா மற்றும் ரஜினிகாந்தின் 68-வது பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா அழகர் கோவிலில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகர்களுக்கு கறி விருந்து வழங்கப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ராகவா லாரன்ஸ், திரைப்பட தயாரிப்பாளர் தியாகராஜன் கலந்து கொண்டு பேசினர்.
மன்றத்தில் தீவிரமாக பணியாற்றியவர்களுக்கு தையல் எந்திரம், வேட்டி – சேலை, சில்வர் பானைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் சைக்கள், மாணவ – மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை நடிகர் ராகவா லாரன்ஸ் வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் 12 வயதில் இருந்து ரஜினியின் தீவிர ரசிகனாக உள்ளேன். தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ரஜினிகாந்த் தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அவரது ஆன்மீக அரசியல் என்பது தனிப்பட்ட மதத்தை முன்னிலைபடுத்துவது இல்லை. அனைத்து, சாதி, மதத்தை ஒருங்கிணைப்பது தான் ஆன்மீக அரசியல். அதை தவறாக புரிந்து கொண்டு அதை விமர்சனம் செய்கிறார்கள்.
மதுரை ஒரு ராசியன மண். எனவே இந்த மண்ணில் இருந்து அரசியல் பிரவேசத்தை ரஜினி தொடங்குவார் என கருதுகிறோம். இதற்காக மதுரையில் முதல் அரசியல் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரையில் நடைபெறும் மாநாட்டில் கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவை அறிமுகம் செய்யப்படும். இந்த மாநாடு விரைவில் நடைபெறும்.
கட்சியின் கொள்கைகள் குறித்த அறிவிப்பும் இந்த மாநாட்டில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்னை பொறுத்தவரை எம்.எல்.ஏ.வாக வேண்டும் என்ற ஆசை இல்லை. ரஜினிகாந்துக்கு காவலனாக இருக்க ஆசைப்படுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.