யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் கலையகத்துக்குள் புகுந்த நபர் தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்திப் பணிப்பாளரைத் தாக்கியதுடன், அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ய முற்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (திங்கட்கிழமை) மாலை 3.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், தாக்குதலை மேற்கொண்டவர் நிறுவன ஊழியர்களால் பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டார்.
இச்சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளாகிய தனியார் செய்தி நிறுவனத்தின் செய்திப் பிரிவின் பணிப்பாளர் தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மருத்துவ சோதனைகளின் பின் வீடு திரும்பியுள்ளார்.
அண்மையில் சட்டவிரோத கேபிள் இணைப்புக்கு எதிராக குறித்த நிறுவனம் அரசிடம் முறைப்பாடு செய்திருந்தது. அதனடிப்படையில் சட்டவிரோத கேபிள் இணைப்புக்களை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது.
இந்நிலையிலேயே சட்டவிரோத கேபிள் இணைப்பை நடத்துவோரால் குறித்த நிறுவனத்துக்கு எதிரான நடவடிக்கைகள் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்படுகின்றன.
அதில் ஒரு செயற்பாடே இது என அந்நிறுவனத்தின் கணக்காளரால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.