ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பிலவும் அவரது கட்சி உறுப்பினர்களும் கூரிய வாள்களுடன் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.
கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உட்பட அக்கட்சியிலுள்ள உறுப்பினர்கள் அனைவரும் கறுப்பு ஆடையுடன் பிரசன்னமாகியிருந்த அதேவேளை, அவர்களது கைகளில் நீண்ட வாள்கள் காணப்பட்டன.
கடந்த 2015ஆம் ஆண்டு இதேபோன்றதொரு நாளில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ரணில் – மைத்திரி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி தோற்கடித்த நிலையில் இன்று அந்த வெற்றிதினம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வீசிய வாளிற்குள் முக்கியமான குற்றவாளிகள் எவரும் அகப்படவில்லை என்பதை எடுத்துக்காட்டும் வகையில் பிவித்துரு ஹெல உறுமய செய்தியாளர் மாநாடு ஒன்றை கொழும்பில் நடத்தியுள்ளது.
மத்திய வங்கியின் பிணைமுறி ஊழல் விவகாரத்தில் குற்றவாளியாக காணப்படும் முக்கியமான அரசியல்வாதிகள் தான் வீசப்போகும் வாளிற்குள் அகப்படுவார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.
ஆனால் ஊழல் விவகாரம் தொடர்பான அறிக்கையை வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முக்கியமான குற்றவாளிகளை காப்பாற்றியுள்ளதாக சுட்டிக்காட்டிய அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, ஜனாதிபதி வீசிய வாள் யாரையும் வெட்டிச்சாய்க்கவில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் பிரதான குற்றவாளிகள் என்றும் அவர்கள் இருவரும் உடனடியாக தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் எனவும் கூறிய உதய கம்மன்பில, அதற்கான ஏற்பாடுகள் எதுவும் அறிக்கையில் இல்லை எனவும் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பரான உதய கம்மன்பில, செய்தியாளர் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது காரசாரமான விமர்சனங்களையும் முன்வைத்தார்.