தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பிலாண்டரின் அபார பந்து வீச்சால் இந்தியா 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய தென்ஆப்பிரிக்கா 286 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
பின்னர் இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. ஹர்திக் பாண்டியாவின் (93) உதவியால் 209 ஓட்டங்கள் சேர்த்தது இந்தியா.
முதல் இன்னிங்சில் 77 ஓட்டங்கள் முன்னிலையுடன் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது.
2-வது நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 65 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
நேற்றுமன்தினம் 3-வது நாள் ஆட்டம் முழுவதும் மழையால் தடைபட்டது.
நேற்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது.
தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 130 ஓட்டங்ககை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
முதலாவது இன்னிங்சில் 77 ஓட்டங்கள் முன்னிலைப் பெற்றதுடன் தென்ஆப்பிரிக்கா 207 ஓட்டங்கள் முன்னிலைப் பெற்றது.
இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 208 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இலகுவான இலக்குடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தவான், முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
அத்துடன் தவான் 16 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய முரளி விஜய் 13 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதனை அடுத்து வந்த புஜாராவும் ஆட்டமிழந்தார்.
4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது.
ஆனால் விராட் கோலி 28 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பிலாண்டர் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதனை அடுத்து தொடந்து வந்த இந்திய வீரர்கள் தென்னாபிரிக்காவின் பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்கமுடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் இந்தியா அணி 135 ஓட்டங்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.
பிலாண்டர் அபாரமாக பந்து வீசி 15.4 ஓவரில் 42 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கெட்டுக்கள் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டும் வீழ்த்திய பிலாண்டர் ஆட்ட நாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.
இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் எதிர்வரும் 13ம் திகதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.