எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் ஊழல் இல்லாத, நேர்மையான, தூரநோக்குடைய அரசியல்வாதிகளை மக்கள் தெரிந்து எடுக்க வேண்டும் என ஒருமித்த முற்போக்கு கூட்டணியின் கொழும்பு மாநகர சபை முதல்வர் வேட்பாளரான சண். குகவரதன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குப்பை அரசியல்வாதிகளை இனம் கண்டு, அவர்களை கூண்டோடு குண்டுக்கட்டாக தூக்கி எறிய வேண்டும் எனவும் சண். குகவரதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பு மாநகர சபைத்தேர்தலில், ஒருமித்த முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏணிச் சின்னத்தில் போட்டியிடும் நிலையில், தங்களுடைய பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சண். குகவரதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த ஆட்சியாளர்களினால் கொண்டுவரப்பட்ட சகல திட்டங்களிலும், ஊழல் தலைவிரித்தாடியதென தெரிவித்த சண். குகவரதன்
குறிப்பாக கொழும்பு மாநகரசபையின் எல்லைக்குள் இன்னும் குப்பை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணமுடியாமல் இருப்பதற்கு கடந்த ஆட்சியாளர்களே கரணம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஆட்சி காலத்தில் கொழும்பு மாநகரசபைக்கு, ஜேர்மனி, நியூசிலாந்து, மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள், குப்பைகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான திட்டத்திற்கு உதவ முன்வந்திருந்ததாக குறிப்பிட்ட சண். குகவரதன்
எனினும், அந்த நேரத்தில் ஆட்சியாளர்களின் கைக்கூலிகளாக இருந்த ஒரு சிலர் குறித்த திட்டத்தினூடாக தரகுப்பணத்தினை எதிர்பார்த்து மேற்கொண்ட தீர்மானங்களினால், அந்த திட்டம் நிறைவேறவில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் தற்போது நல்லாட்சி அரசாங்கத்தின் முயற்சியினால் பொலித்தீன் பாவனை கணிசமான அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதை அண்மைக்காலமாக அவதானிக்க கூடியதாகவுள்ளதாகவும் சண். குகவரதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான புதிய நவீன முறையில் பல செயல் திட்டங்களை கொழும்பு நகரத்துக்கு உள்ளே செய்யவுள்ளதாக தெரிவித்த சண். குகவரதன்
இம்முறை இந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டால் இனி ஒரு சந்தர்ப்பம் எமக்கு கிடைக்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.