யாழ். மாவட்டத்தில் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்த வடக்கு மாகாண முதலமைச்சர் விசேட பொலிஸ் குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடக்கு மாகாண சபையின் 115வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
இந்த அமர்வில் மாகாணசபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் யாழ். மாவட்டத்தில் போதை பொருள் பாவனை அதிகரித்திருக்கும் நிலையில் அதனை கட்டுப்படுத்த வேண்டும் என கோரும் விசேட கவனயீர்ப்பு விடயம் ஒன்றை சபைக்கு கொண்டுவந்தார்.
அந்த கவனயீர்ப்பு விடயத்தின் மீது கருத்து தெரிவிக்கும்போதே உறுப்பினர்கள் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இதன்போது உறுப்பினர் ஐயூப் அஸ்மின் கருத்து கூறுகையில், யாழ். மாவட்டத்தில் அண்மைக் காலமாக போதை பொருள் பாவனை அதிகரித்திருக்கின்றது.
ஆனால் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை என கூறினார்.
தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் உரையாற்றுகையில், பாடசாலைகளை இலக்கு வைத்து போதை பொருள் பாவனை பரப்பப்படுகின்றது. எனவே முதலமைச்சர் விசேட பொலிஸ் குழுவை நியமித்து போதை பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றார்.
தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் இ. ஜெயசேகரம் உரையாற்றுகையில், முதலமைச்சர் பொலிஸார், கடற்படையினர் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களை இணைத்த வகையில் விசேட கூட்டம் ஒன்றை ஒழுங்கமைத்து போதை பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றார்.