சிக்கிம் மாநிலத்தின் விளம்பரத் தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த ‘ஆஸ்கார் நாயகன்’ இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், வடகிழக்கும் மாநிலமான சிக்கிம்மின் அதிகாரப்பூர்வ விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கேங்டாக்கில் நடைபெற்ற ரெட் பாண்டா விண்டர் கார்னிவலின் துவக்கவிழாவில் பேசிய சிக்கிம் முதலமைச்சர் பவன் குமார் சாம்லிங், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிக்கிம்மின் அதிகாரப்பூர்வ விளம்பரத் தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
சிக்கிம்மிற்கு சுற்றுலா கீதம் உருவாக்கப்போகும் ரஹ்மான், விழாவிற்கு பாரம்பரிமான உடை அணிந்து வந்து, குத்துவிளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஹ்மான், சிக்கிம்மின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளது, மிகவும் பெருமை வாய்ந்த ஒன்று எனவும், சகிப்புத்தன்மை, ஒருமைப்பாடு, இரக்கம், சமாதானம் முதலியவற்றிற்கு, சிக்கிம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு எனவும் கூறினார்.
மேலும், இந்த அழகிற்கு நன்றி செலுத்துவதும் இதனை பாதுகாப்பதும் நம்முடைய கடமை என்றும் கூறினார். ஏ.ஆர்.ரஹ்மானின் குழு, மார்ச் மாதம் சிக்கிம்மில் ஒரு கச்சேரி நிகழ்த்துவதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.