இந்தியாவில் பத்தாண்டு காலமாக நீடித்து வரும் காவிரி வழக்கில் இன்னும் நான்கு வாரங்களில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக கடந்த 2007ம் ஆண்டு காவிரி நதிநீர் ஆணையம் தனது தீர்ப்பை வழங்கியது.
குறித்த் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்குத் தொடர்ந்திருந்தன.
இந்த வழக்கு பத்து ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், வாதப்பிரதிவாதங்கள் அனைத்தும் முடிவுற்று, கடந்த செப்டம்பர் 20ம் திகதியன்று திகதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு, காவிரி வழக்கில் நான்கு வாரங்களில் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பாக எந்த முடிவையும் யாராக இருந்தாலும் நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர் தான் எடுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் கடந்த இருபது ஆண்டுகளாக போதுமான அளவுக்கு குழப்பம் உருவாக்கப்பட்டு விட்டது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.