தன்னை புகழ்ந்து பேச வேண்டாம் என ததமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சட்டசபை இன்று காலை கூடியது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 12 பேர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஒக்கி புயலின் போது உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, பேசிய சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, ‘ஜல்லிகட்டு நாயகன்’ என்று புகழ்ந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டன.
கேள்வி நேரத்தில் தலைவர்களை பாராட்டக்கூடாது என எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அவர்களை அமைதிப்படுத்தும் முயற்சியில் சபாநாயகர் ஈடுபட்டார்.
இதன்போது குறுக்கிட்டு பேசிய துணை முதலமைச்சர், என்னை புகழ்ந்து பேச வேண்டாம் என அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
அத்துடன், அனைத்து புகழும் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவுக்கே உரித்தானது எனவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.