தனது கொள்ளை அழகால் காண்போரையெல்லாம் கட்டிப்போடும் ஆல்ப்ஸ் மலை, இன்று நிஜமாகவே ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகளைக் கட்டிப்போட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக வீசிய புயலும் பனிப்பொழிவும் மழையும் பனிப்பாறைச் சரிவுகளை ஏற்படுத்தின.
பனிச்சரிவும் நிலச்சரிவும் ரயில் பாதைகளை மூட, மேலும் பனிப்பாறைச் சரிவு ஏற்படும் என்ற பயத்தில் அரசாங்கம் சாலைகளையும் மூடியது.
வெளியே செல்ல முடியாமல் சுற்றுலாப்பயணிகள் அறைகளுக்குள் முடங்கிப்போன நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
Zermatt Resort-க்கு சுற்றுலா வந்த சுமார் 13,000 பேர் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டுள்ளனர், கண்டிப்பாக வெளியேற வேண்டும் என வலியுறுத்திய சிலர் மட்டும் ஹெலிகாப்டர் மூலம் வெளியேற்றப்பட்டனர்.
இதற்கிடையே சுற்றுலாப்பயணிகள் தாங்கள் சிக்கிக்கொண்டிருப்பதையும் பற்றிக் கவலைப்படாமல் உற்சாகமாக இருப்பதாக தெரிவித்ததாகவும், சிலர் “காதல் வயப்படச் செய்யும் சூழல்” என்று வர்ணித்ததாகவும் BBC செய்தியாளர் Imogen Foulkes தெரிவிக்கிறார்.
தற்போது ஹெலிகாப்டர் மூலம் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக Zermatt அதிகாரிகள் ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளனர்.
Zermatt அமைந்துள்ள Valaisஇன் Simplon பகுதியில், 24 மணி நேரத்தில் இரண்டு மீட்டர்கள் (6.6 அடி) பனி பெய்துள்ளதாக சுவிஸ் ATS செய்தி நிறுவனம் கூறியது.
Wengen பகுதியில் நடைபெற இருந்த ஆண்கள் உலகக் கோப்பை பனிச்சறுக்குப் பந்தயத்திற்கான முதல் பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
பனியும் காற்றும் பந்தயம் நடைபெற இருந்த பாதையின் உள்கட்டமைப்பை வெகுவாக பாதித்துள்ளதாக பந்தய அமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.