இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கருத்துத் தெரிவித்துள்ளார்.
முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று விசேட உரையாற்றியபோது சபையில் கடும் அமளி ஏற்பட்டமை யாவரும் அறிந்ததே!!
பிரதமர் தமது உரையின் இறுதியில் ‘யார் திருடன்?’ என கோசமெழுப்பியிருந்ததுடன் அதற்கு ஆளும் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் சிலர் ‘மகிந்த திருடன்’ என பதிலளித்தனர்.
எவ்வாறாயினும், பிரதமரின் உரை நிறைவுபெற்றதன் பின்னர் சபையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டது.
இதுபற்றி கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,
யார் திருடியது, திருடாதது யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியாதளவு இன்று கைகலப்பு வரை சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.
முன்னர் கொழும்பு கோட்டையில் அதிகளவில் பிக்பொக்கெட் அடிப்பவர்கள் இருந்ததை அறிவீர்கள் என தெரிவித்த ஜனாதிபதி
அப்பாவி மக்கள் நடைபாதையில் செல்லும் போது அவர்களின் பைகளிலிருக்கும் பணத்தை திருடிச்செல்வார்கள் எனவும் குறிப்பிட்டார்.
பணத்தை எடுத்துக்கொண்டு ஓடுவார்கள். அப்போது, எனது பணத்தை எடுத்துக்கொண்டு திருடன் ஓடுகிறான் என உரிமையாளர் கூச்சலிடுவார். பணத்தின் உரிமையாளரும் திருடனும் ஒருவர் பின் ஒருவர் ஓடுவதை மக்கள் காண்பார்கள். அப்போது திருடியவன் ‘அதோ திருடன்’ என கூறிக்கொண்டு ஓடுவான். இதுவே இன்று அரசியலிலும் நடைபெறுகிறது என குறிப்பிட்டார்.
இன்றைய சம்பவத்தின் பின்னர் யார் திருடுகின்றார்கள், யார் திருட்டில் ஈடுபடவில்லை என்பதை இந்நாட்டு மக்கள் தெளிவாக அறிந்திருப்பார்கள் என தாம் நம்புவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.