இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திகா ஹதுருசிங்காவின் ஊக்கம் மற்றும் வற்புறுத்தல் காரணமாகவே மீண்டும் அணித் தலைவர் பதவியை ஏற்க சம்மதித்ததாக மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக மீண்டும் 2019 உலக கிண்ணம் வரை மேத்யூஸ் செயல்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கடந்த யூலை மாதம் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் அணிக்கு நான்கு தலைவர்கள் மாறியுள்ளமையும் யாவரும் அறிந்ததே!
ஆனாலும் இலங்கை அணியின் செயல்பாடு படுமோசமாக இருந்த நிலையில் ஒருநாள் அணிக்கு மீண்டும் மேத்யூஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மேத்யூஸ் கூறுகையில்,
இனி நான் அணித்தலைவர் பொறுப்பை மீண்டும் ஏற்க வேண்டாம் என்றே இருந்தேன், தெரிவாளர்கள், தலைமை பயிற்சியாளர் என் முடிவை மறுபரிசீலனை செய்ய சொன்னார்கள்.
உலக கிண்ண போட்டிக்கு சிறிது காலமே உள்ளதால் அணிக்கு நிலையான தலைமை வேண்டும் என அவர்கள் கோரினார்கள்.
இப்போது இந்த பணியை ஏற்காவிட்டால் பின்னால் வருத்தப்பட நேரிடும் என நினைத்தேன்.
எனக்கு ஹதுருசிங்கா நீண்ட காலமாக தெரியும், அவருடன் இணைந்து செயல்படுவது எளிதாகும்.
நான் மீண்டும் அணித் தலைவராக ஆக வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அதுவே நான் சம்மதிக்க முக்கிய காரணமாகும் என கூறியுள்ளார்.