ஜல்லிக்கட்டில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தேசிய மிருகநல வாரியம் தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
தேசிய மிருகநல வாரியத்தின் செயலாளர் எம்.ரவிக்குமாரினால், இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அரசாங்கம் அறிவித்துள்ள இடங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் ஜல்லிக்கட்டு தொடர்பான நிகழ்ச்சிகள் மிருகவதை தடை சட்டத்தின் கீழ் வரையறுத்துள்ளபடி பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதை மாவட்ட அரசாங்க அதிபர்கள் உறுதிபடுத்தி கொள்ள வேண்டும்.
அத்துடன், பார்வையாளர்களுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் காளைகள் வெளியேறும் பகுதியில் இரட்டை தடுப்பு அமைக்க வேண்டும்.
காளைகளின் வீரியத்தை அதிகரிக்கும் வகையில் மருந்து எதுவும் செலுத்தப்படவில்லை என்று கால்நடை துறையிடம் சான்றிதழ் பெற வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டில் பங்கேற்பவர்கள் உடல்ரீதியாக தகுதியானவர்களா? என்பது குறித்து மருத்துவர்கள் சான்று அளிக்க வேண்டும்.
அதன் பிறகே அவர்கள் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டும்.
ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் உடனடி மருத்துவ உதவி கிடைக்கும் வகையில் மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும்
என்பதுடன், நோயாளர் காவு வண்டி வசதியும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காளைகள், போட்டியில் பங்கேற்பவர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு ஒரு நாளைக்கான காப்புறுதி ஏற்பாடு செய்ய வேண்டும்.
மூன்று வயதுக்கு உட்பட்ட மற்றும் 15 வயதுக்கு மேற்பட்ட காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்க கூடாது.
அத்துடன், காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் ஜல்லிக்கட்டை நடத்தி முடிக்க வேண்டும் என்பது உட்பட 19 வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தேசிய மற்றும் மாநில மிருகநல வாரியங்கள் சார்பில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை மேற்பார்வையிடுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட 10 உறுப்பினர்கள் பட்டியலும் இந்த கடிதத்தில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.