தமிழ்நாட்டில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாரா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தமிழக அரசு அது குறித்து பதில் மனு தாக்கல் செய்தது.
மனுவில், போக்குவரத்து ஊழியர்களின் பிரச்னையில் தீர்வு காண சமரச பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். அதே சமயம், ஊதிய விகிதம் உள்ளிட்ட மற்ற கோரிக்கைகளை ஏற்க முடியாது.
வேலை நிறுத்தம் செய்த நாட்களுக்கான ஊதியத்தை வழங்க முடியாது என்றும், பல பகுதிகளில் ஊழியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளை கைவிட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு தயார் என்று அறிவித்திருக்கும் நிலையில் உங்கள் நிலை என்ன நீதிபதிகள் தொழிற்சங்கங்களிடம் கேள்வி எழுப்பினார்.
தமிழக அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணைக்கு வந்தது.
அப்போது, தொழிற்சங்கங்கள் தரப்பில் கூறப்பட்டதாவது, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பான பிரச்னையை தீர்க்கும் விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி நடுவராக செயல்பட வேண்டும்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காலத்துக்கான ஊதியத்தை போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு வழங்க வேண்டும்.
ஜனவரி 4ம் தேதி போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், சமரச பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டால் மீண்டும் பேருந்துகள் இயக்கப்படும் என்று நீதிமன்றத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின.
தமிழக அரசு தொழிற்சங்கங்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த தயாரா என்பது குறித்து நீதிபதி கேட்டதற்கு, அது குறித்து தமிழக அரசின் கருத்தைக் கேட்டு சொல்வதாக அரசு வழக்குரைஞர் கூறியதால், வழக்கு விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதே சமயம், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பேச்சு வார்த்தைக்கு வராமல் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்றும் அரசின் சார்பில் குற்றம்சாட்டப்பட்டது.
வழக்கு விசாரணை முடிந்து வெளியே வந்த சிஐடியு தலைவர் சவுந்தரராஜன், ‘நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்குப் பிறகுதான் எங்கள் முடிவை தெரிவிப்போம்’ என்று கூறியிருந்தார்.
பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று தமிழக அரசு பதில் மனுவை தாக்கல் செய்தது