இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த கே.சிவனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரோ அமைப்பின் தலைவராக உள்ள ஏ.எஸ்.கிரண்குமாரின் மூன்றாண்டுகள் பதவிக்காலம் வரும் 12ஆம் திகதியுடன் முடிவடைகிற நிலையிலேயே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து புதிய தலைவராக திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக உள்ள தமிழரான கே.சிவன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இஸ்ரோவின் மிகப்பெரிய விண்வெளி நிலையமாகக் கருதப்படும் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி நிலைய இயக்குநராகப் பணியாற்றுவதற்கு முன்பாக, நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள திரவ இயக்கத் திட்ட மையத்தின் இயக்குநராக சிவன் பணியாற்றினார்.
சென்னை எம்.ஐ.டி. கல்விநிறுவனத்தில் ஏரோநாட்டிக்கல் பாடப்பிரிவில் கடந்த 1980இல் பட்டம்பெற்ற சிவன், கடந்த 2006ஆம் ஆண்டில் மும்பை ஐ.ஐ.டி யில் முனைவர் பட்டத்தைப் பெற்றார்.
இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.