கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர் ஒருவர், நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு, நாடு கடத்தப்படுவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே தெரிவிக்கப்பட்டள்ளது.
சுரேஸ்நாத் இரத்தினபாலன் என்ற 48 வயதுடையவர், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அபுதாபி வழியாக நேற்று முன்தினம் மாலை 3.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கியுள்ளார்.
குடிவரவு அதிகாரிகளால் அவர்களின் கடவுச்சீட்டுகள் சோதனையிடப்பட்ட போது, சுரேஸ்நாத் இரத்தினபாலனின் பெயர் கறுப்புப்பட்டியலில் இருப்பது கண்டறியப்பட்டது.
அவரது குடும்பத்தினரை நாட்டிற்குள் செல்ல அனுமதி அளிக்கப்பட்ட போதும், குடும்பத்தினர் அவருடனேயே இருக்க முடிவு செய்துள்ளனர்.
திருப்பி அனுப்பப்படுவதற்காக அவர்கள் விமான நிலைய இடைத்தங்கல் அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இவர்களை நாடு கடத்தும் உத்தரவை ரத்துச் செய்து, நாட்டிற்குள்; நுழைவதற்கான அனுமதியைப் பெற்றுக் கொடுக்க பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கொழும்பு நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஸ்நாத் இரத்தினபாலன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர் என்றும், முன்னைய அரசாங்கத்தினால் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்ட புலம்பெயர் தமிழர்களில் ஒருவர் என்றும் கூறப்படுகிறது.
இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக குடிவரவுக் கட்டுப்பாட்டாளரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரனுக்கு மின்னஞ்சல் அனுப்பி, அவரது பதிலுக்கு காத்திருப்பதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.