பாகிஸ்தான் அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 183 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ள நியூஸிலாந்து ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் 3:0 என்ற ரீதியில் முன்னிலை பெற்றுள்ளது.
டுனேடினில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 257 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் நியூஸிலாந்து அணியின் சார்பில் அணித்தலைவர் வில்லியம்ஸன் 73 ஓட்டங்களையும் டெய்லர் 52, குப்தில் 45 மற்றும் டொம் லாதம் 35 ஓட்டங்களையும் போல்ட் 13 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
இவர்கள் தவிர அணியின் ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் ரும்மன் ரைஸ் மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் சதாப் கான் 2 மற்றும் பஹீம் அஸ்ரஃப் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து 258 என்ற ஓட்ட இலக்குடன் துடுப்பாட்டத்தில் களமிறங்கிய பாகிஸ்தான் 27.2 ஓவர் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 74 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள 183 ஓட்டங்களால் நியூஸிலாந்து வெற்றியை தனதாக்கியது.
துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக சப்ராஸ் அஹமட் 14 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் போல்ட் 5 விக்கெட்களையும் முன்ரோ மற்றும் பேர்குசன் தலா 2 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
முன்னதாக நடைபெற்ற முதலிரு ஒருநாள் போட்டிகளிலும் டக்வேர்த் லூயிஸ் முறையில் நியூஸிலாந்து வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.