கேப்டவுனில் நடைபெற்ற தென் ஆபிரிக்க அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளை அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் வழங்கியுள்ளார்.
இந்தியா மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (சனிக்கிழமை) செஞ்கூரியனில் ஆரம்பமாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் கேப்டவுன் தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள சச்சின், அதற்கான சில ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.
இந்திய துடுப்பாட்ட வீரர்கள் முதல் 25 ஓவர்களுக்கு கவனம் செலுத்த வேண்டும் என்றும் 50 ஓவர்களுக்கு பின்னர் துரிதப்படுத்த வேண்டும் என்றும் பந்து வீச்சாளர்கள் சரியான இடங்களில் பந்து வீச வேண்டும் என்றும் சச்சின் தெரிவித்துள்ளார்.
அத்துடன், முக்கியமான விடயம் வீரர்கள் ஒரு அணியாக நேர்மறையாக இருக்க வேண்டும் என்றும் சச்சின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘கேப்டவுன் தோல்வியால் வீரர்களின் மனநிலை சோர்வடைந்திருக்காது என நம்பிக்கை வெளியிட்டுள்ள சச்சின் ஆனாலும் இன்றைய போட்டி சவாலாகவே அமையும் என்றும் எச்சரித்துள்ளார்.
எனவே தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் போது துடுப்பாட்ட வீரர்களுக்கு விராட் கோஹ்லி ஊக்கமளிக்க வேண்டும்’ என்றும் சச்சின் மேலும் தெரிவித்துள்ளார்.