நாட்டில் குறிப்பாக தமிழர் பிரதேசங்களில் தொடர்ந்தும் இராணுவம் நிலை கொண்டிருப்பது ஆபத்து என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பொங்கல் விழா மிகச் சிறப்பாக இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டபின் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே வீ.ஆனந்தசங்கரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது எங்குமே யுத்தம் நடைபெறவில்லை என்பதால் இராணுவத்தின் பிரசன்னம் வடபகுதிகளில் தேவையில்லை எனவும் குறிப்பாக தமிழர் தாயகப் பிரதேசங்களில் இராணுவம் தேவையில்லை என்றும் வீ.ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டியுள்ளார்.
இராணுவத்தின் தேவைகளுக்கு காணிகள் தேவையில்லை என தெரிவித்துள்ள வீ.ஆனந்தசங்கரி அவர்களுக்கு சம்பளம் கிடைக்கின்றது எனவும் காணிகள் தேவை எனில் முகாம்கள் மட்டுமே போதும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வட பகுதியில் மக்களது காணிகளை வழங்காது இருக்கின்றமை கொடுமையான விடயம் என்றும் வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.
இதைவிடவும் மேலும் கொடுமையான விடயம் தமிழ்த் தலைவர்கள் பார்த்துக் கொண்டிருப்பது தான் எனவும் ஆகவே விரைந்து அரசாங்கம் இக்காணிகளை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என ஆனந்தசங்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.