வீட்டில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் உடனே ஆண்டவனைத்தான் கும்பிடுவோம். அப்படித்தான் ஜெயலலிதாவிற்கும் பிரார்த்தனை செய்தோம் என்று பா.வளர்மதி கூறியுள்ளார்.
தீச்சட்டி ஏந்தியவருக்கா பெரியார் விருது என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதிக்கு, தந்தை பெரியார் விருது தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரியார் விருது வழங்கப்படுவது குறித்து, பா.வளர்மதி, வெப்சைட் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
தமிழக அரசு அளிக்கும் பெரியார் விருதை தாங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, நான் சிறு வயதில் இருந்தே பெரியார் கொள்கையால் ஈர்க்கப்பட்டவள்.
சிறு குழந்தையாக இருந்தபோது, பெரியார் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், நான் மேடையில் பேசியிருக்கிறேன்.
அப்போது, எனது தந்தை, நீயும் இந்த தாத்தா மாதிரி பெரிய ஆளா வரணும்னு சொன்னார் என்னிடம். தற்போது பெரியார் விருது கிடைக்கும் என்று நான் நினைத்துக்கூட
பார்க்கவில்லை என்று கூறினார்.
ஜெயலலிதா, சொத்துக்குவிப்பு வழக்கில், விடுதலைப்பெற தீச்சட்டி ஏந்தினீர்கள். இந்த படங்களை பதிவிட்டு, இவருக்கு பெரியார் விருதா என சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிக்கப்பட்டு வருவது குறித்து பா.வளர்மதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், எவ்வளவு பெரிய கொள்கைகளைத் தாங்கியவர்களாக நாம் இருந்தாலும், வீட்டில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால், உடனே ஆண்டவனைத்தானே கும்பிடுவோம். அப்படித்தான் ஜெயலலிதாவுக்கும் பிரார்த்தனை செய்தோம் என்றார்.
இது சாதாரண நிகழ்வுதான். சமூக ஊடகங்களில் இருப்பவர்கள் அனைத்தையும் விமர்சனம் செய்கிறார்கள்.
அவர்கள் யாரைத்தான் விமர்சனம் செய்யவில்லை. விமர்சனங்களை எப்போதும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பெரியார், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா என அனைவருமே விமர்சனங்களை எதிர்கொண்டவர்கள்தான்.
விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வர வேண்டும் என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், நெற்றியில் திருநீரும் பொட்டும் வைத்துக்கொள்வதால் மட்டும் திராவிட இயக்கக் கொள்கைகளை இழுத்து மூடிவிட முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
பெரியாரை பார்த்து வளர்ந்தவர் கருணாநிதி, இன்று அவர் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லாம் ஆலயத்துக்கு செல்கிறார்கள்.
அதற்காக பெரியார் கொள்கையில் இருந்து திமுக விலகிவிட்டது என சொல்லமுடியுமா? என பா.வளர்மதி எதிர்கேள்வி கேட்டார்.