கண்டி – பேராதனை பல்கலைக்கழத்தில் இரண்டு மாணவக் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதல் சம்பவம் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை இடம்பெற்றிருப்பதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் முதலாம் வருடத்தில் இணைந்துள்ள புதிய மாணவர்களுக்கு பழைய மாணவர்களால் பகிடிவதை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போதே இரு பிரிவினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் படுகாயமடைந்த இரண்டு மாணவர்கள் பேராதனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மோதல் சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம், பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை நடத்திவருகின்றது.
இதேவேளை பேராதனை பல்கலைக்கழகத்தில் கடந்த வருடம் இவ்வாறு இடம்பெற்ற பகிடிவதை காரணமாக அதனுடன் தொடர்புபட்ட மாணவர்கள் பலரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கடுமையான பகிடிவதையை வழங்குவதற்காக பல்கலைக்கழக மாணவர்களால் சித்திரவதை முகாம் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்ததாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.