2-வது டெஸ்டில் செய்தது போன்ற சிறுபிள்ளைத்தனமான தவறுகளை பாண்டியா செய்தால் என்னுடன் ஒப்பிட்டுப் பேசக்கூடிய தகுதி அவருக்கு இருக்காது என்று முன்னாள் ஆல்ரவுண்டர் கபில் தேவ் ஹார்திக் பாண்டியாவை விமரிசனம் செய்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 135 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது அந்த அணி. இரு அணிகளுக்கு இடையே செஞ்சுரியன் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கடைசி நாளான புதன்கிழமை இந்தியா 7 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 252 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. எனினும், தென் ஆப்பிரிக்காவின் எல்.கிடி மற்றும் ராபாடாவின் பந்துவீச்சு, இந்தியாவை 151 ரன்களுக்குள்ளாக சுருட்டியது. 2-ஆவது இன்னிங்ஸில் 39 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் வீழ்த்திய எல்.கிடி ஆட்ட நாயகன் ஆனார்.
நேற்று, இந்திய ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா 6 ரன்களில் கிடி பந்துவீச்சில் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முதல் இன்னிங்ஸில் அஜாக்கிரதையாக ஓடி ரன் அவுட் ஆகி ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானார். அவருடைய இந்த மோசமான ஆட்டங்கள் ஆல்ரவுண்டர் கபில் தேவின் அதிருப்திக்கும் ஆளாகியிருக்கிறது. கபில் தேவுடன் ஒப்பிட்டு பாண்டியா அடிக்கடிப் பேசப்படுவதால் முதலில் பாண்டியாவுக்கு ஆதரவாகப் பேசிவந்த கபில் தேவ் தற்போது விமரிசனம் செய்துள்ளார்.
தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது.
2-வது டெஸ்டில் செய்தது போன்ற சிறுபிள்ளைத்தனமான தவறுகளை பாண்டியா செய்தால் என்னுடன் ஒப்பிட்டுப் பேசக்கூடிய தகுதி அவருக்கு இருக்காது. பாண்டியாவுக்கு நிறைய திறமைகள் உண்டு. அதை முதல் டெஸ்டில் நிரூபித்துள்ளார். ஆனால் சரியான மனநிலையுடன் விளையாடுவது குறித்து அவர் யோசிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
முன்னாள் வீரர் சந்தீப் பாடீலும் பாண்டியாவை கபில் தேவுடன் ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் கூறியதாவது: கபில் தேவுடன் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளேன். நிச்சயம் பாண்டியாவை கபிலுடன் ஒப்பிட முடியாது. கபில், 15 வருடங்கள் இந்திய அணிக்காக அருமையாக விளையாடியவர். ஆனால் பாண்டியா இப்போதுதான் 5-வது டெஸ்டில் விளையாடுகிறார். கபில் தேவுடன் ஒப்பிட அவர் இன்னும் நீண்ட தூரம் செல்லவேண்டும் என்று கூறியுள்ளார்.